You are currently viewing நான்காவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு 2023 ஆவணி 07, 08

நான்காவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு 2023 ஆவணி 07, 08

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சர்வதேச ஆய்வரங்கின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் எஸ்டேற் கந்தையா கார்த்திகேசன் அறக் கட்டளை நிதியத்தின் முழுமையான நிதிப் பங்களிப்புடன் நான்காவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு 2023 ஆவணி 07, 08 ஆம் திகதிகளில் கைலாசபதி கலையரங்கில் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர். கி. விசாகரூபன் தலைமையில் சிறப்பாக ஆரம்பமாகின. ‘சமூகக் கட்டுமானத்தில் சங்கமருவியகால அற இலக்கியங்கள்’ என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இம் மாநாட்டின் ஆரம்பநாள் நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தினை திரு. ப. சிவமைந்தன் (போதனாசிரியர், இசைத்துறை, சேர் பொன் இராமநாதன் கட்புல மற்றும் ஆற்றுகைகள் பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) இசைத்தார். அடுத்த நிகழ்வாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சேர் பொன் இராமநாதன் கட்புல மற்றும் ஆற்றுகைகள் பீட நடனத்துறை மாணவிகள் வரவேற்பு நடனத்தை அளிக்கை செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வரவேற்புரையினை திரு. ஈ. குமரன் (சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை) அவர்களும், ஆசியுரையினை தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான தலைவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினருமான கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களும் வழங்கினர்.

தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் சிரேஷ்ட பேராசிரியரும் தலைவருமான பேராசிரியர். கி. விசாகரூபன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். மாநாட்டின் இணைத் தலைவரும் கலைப்பீடாதிபதியுமான பேராசிரியர். சி. ரகுராம் அவர்கள் வாழ்த்துரை நல்கினார். அடுத்த நிகழ்வாக பேராசிரியர். கி. விசாகரூபன் அவர்களின் திறப்புரைஞர் அறிமுகத்தைத் தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழக தமிழ்மொழித்துறைத் தலைவர் பேராசிரியர். ய. மணிகண்டன் அவர்கள் ‘தமிழில் அற இலக்கியம்: வரலாறும் பல்பரிமாணங்களும்’ என்ற தொனிப்பொருளில் திறப்புரை ஆற்றினார். திறப்புரைஞரின் உரையைத் தொடர்ந்து புலமையாளர் கௌரவிப்பு இடம்பெற்றது.

முதலாவதாக மூத்த பேராசிரியர்களுக்கான கௌரவிப்பு நடைபெற்றது. இதில் பேராதனைப் பல்கலைக்கழக தகைசால்; பேராசிரியர் இலக்கியக் கலாநிதி எஸ். தில்லைநாதன் அவர்களும், தகைசால் பேராசிரியர் முதுமுனைவர் அருணாசலம் சண்முகதாஸ் அவர்களும் மேற்படி கௌரவத்தினை துணைவேந்தரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

மரபுவழித் தமிழ்ப் புலமையாளர்களின் வரிசையில் பண்டிதை தனலட்சுமி மகாலிங்கம் மற்றும் பண்டிதர் தாந்திப்பிள்ளை கோபாலகிருஷ்ணன் (வருகைதராத நிலையில்) ஆகியோர் துணைவேந்தர் கரங்களினால் கொளரவத்தினைப் பெற்றுக்கொண்டனர்.

அடுத்த நிகழ்வாக மூத்த அண்ணாவிமாருக்கான கௌரவிப்பினை செபஸ்தியான் மாசிலாமணி (பிலேந்திரன்) (முருங்கன், மன்னார்), சீமான் பத்திநாதன் பர்ணாந்து (வங்காலை, மன்னார்), மாரிமுத்து கோபாலன் (கலபொட நாவலப்பிட்டி), வேலுப்பிள்ளை சிதம்பரநாதன் (மாவிட்டபுரம், யாழ்ப்பாணம்), கறுவல் கந்தவனம் (பனிச்சங்கேணி, மட்டக்களப்பு), கணபதிப்பிளை சிற்சபேசன் (மாதனை, பருத்தித்துறை), மூத்ததம்பி கணபதி (மதுரங்கேணிக்குளம், மட்டக்களப்பு), தம்பிமுத்து நாகராசா (அம்பலவன் பொக்கணை, முல்லைத்தீவு), கதிரவேலு பாலசிங்கம் (வற்றாப்பளை, முள்ளியவளை, முல்லைத்தீவு), வேலாயுதம் தவநிருபசிங்கம் (வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்) ஆகிய பத்து அண்ணாவிமார்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரின் கரங்களினால் பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து யாழ்ப்பாணத் தமிழ் அகராதி முயற்சிக்காக ‘அகராதிவல்லுநர்’ கௌரவம் திருவாளர் நடராஜா சிறிரஞ்சன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரின் கரங்களினால் வழங்கப்பட்டது.

அடுத்து தமிழ்த்துறையினரால் வடக்குமாகாணப் பாடசாலை உயர்தர வகுப்பு மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் வெற்றியீட்டிய முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒன்பது பீடங்களைச் சேர்ந்த 341 மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட தமிழறிவுப் போட்டிப் பரீட்சையில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும் முறையே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரின் கரங்களினால் வழங்கப்பட்டது.

இவற்றைத் தொடர்ந்து ஆய்வுக்கட்டுரைத் தொகுதி வெளியீடு நடைபெற்றது. இவ் ஆய்வுக்கட்டுரைத் தொகுதியை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராசா அவர்கள் வெளியிட்டுவைக்க, திறப்புரைஞராகக் கலந்து சிறப்பித்த சென்னைப் பல்கலைக்கழக தமிழ்மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் ய. மணிகண்டன் அவர்கள் அதன் முதற்பிரதியைப்; பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து சிறப்புப்பிரதிகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராசா அவர்களின் வாழ்த்துரையும் இடம்பெற்றது.

நிறைவாக நான்காவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டினை இணைப்பாளரும் தமிழ்த்துறை பேராசிரியருமான (செல்வி) செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் அவர்களின் நன்றியுரையுடன் ஆரம்ப நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.

தொடர்ந்து பிற்பகல் 02.30 மணிமுதல் ஆய்வரங்க நிகழ்வுகள் நான்கு அமர்வுகளாக நடைபெற்றன. இலங்கையின் புகழ்பூத்த பேராசிரியர்களான, பேராசிரியர் சு. வித்தியானந்தன், பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர். கா. சிவத்தம்பி, பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை ஆகியோர்களின் பெயர்களில் இவ் அமர்வுகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த அமர்வுகளில் நாற்பத்தெட்டு கட்டுரைகள் ஆய்வாளர்களால் அளிக்கை செய்யப்பட்டன.

இந்த நான்காவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டின் தொடர் நிகழ்வாக இரண்டாம் நாள் நிகழ்வுகள் 08 ஆவணி 2023 மாலை 02.30 மணியளவில் கைலாசபதி கலையரங்கில் ஆரம்பமாகின. முதல் நிகழ்வாக வாழ்த்துரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் அவர்கள் வழங்கினார். அடுத்த நிகழ்வாக வடக்குமாகாணப் பாடசாலை உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் முதலாம் இடம்பெற்ற யாழ். இந்துக்கல்லூரியைச் சேர்ந்த மாணவன் ஜெ. தவேதன் அவர்களின் உரை இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து மையநிகழ்வான ‘ஈழத்துப் பாரம்பரிய அரங்கு: பல்வகைமையும் பயில்முறையும்’ என்ற தலைப்பிலான கூத்துக்கதம்ப நிகழ்விற்காக அரங்கானது அதன் இணைப்பாளர் கல்வியியல்துறை விரிவுரையாளர் திரு. வை. விஜயபாஸ்கர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

‘சிவவேடனும் தவவேடனும்’, ‘கோவலனார் கதை’, ‘பண்டாரவன்னியன்’, ‘சத்தியவான் சாவித்திரி’, ‘காத்தவராயன்’ ஆகிய கூத்து மற்றும் இசைநாடகங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் அரங்காற்றுகை செய்யப்பட்டன. அரங்கு நிறைந்த கூட்டத்தினரின் பலத்த ஆதரவுடன் ஒவ்வொரு ஆற்றுகைகளும் நிகழ்ந்தேறின. ஒவ்வொரு ஆற்றுகை முடிவிலும் கலைஞர்களுக்கான சான்றிதழ்கள் கலைப்பீடாதிபதி பேராசிரியர். சி. ரகுராம், தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கி. விசாகரூபன், கலாநிதி எஸ். சிவலிங்கராஜா, பேராசிரியர் ம. இரகுநாதன், பிரதிப்பதிவாளர் கிறிஸ்ரி ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டன. நிறைவாக நன்றியுரையினை தமிழ்த்துறை விரிவுரையாளர் த. அஜந்தகுமார் அவர்கள் வழங்க இரண்டாம் நாள் நிகழ்வுகள் அனைத்தும் மாலை 06.30 இற்கு இனிதே நிறைவேறின.