யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்கின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் எஸ்டேற் கந்தையா கார்த்திகேசன் அறக்கட்டளை நிதியத்தின் முழுமையான நிதிப்பங்களிப்புடன் ஐந்தாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு 2024 ஐப்பசி 07 மற்றும் 08ஆம் திகதிகளில் கைலாசபதி கலையரங்கில் தமிழ்த்துறைத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர். கி. விசாகரூபன் தலைமையில் சிறப்பாக ஆரம்பமாகின.
‘இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்: இலக்கியத்தின் ஊடான மானுட விடுதலை’ என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இம் மாநாட்டின் ஆரம்பநாள் நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து இறைவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தினை திரு. ப. சிவமைந்தன் (போதனாசிரியர், இசைத்துறை, சேர் பொன் இராமநாதன் கட்புல மற்றும் ஆற்றுகைகள் பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) இசைத்தார். அடுத்த நிகழ்வாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சேர் பொன் இராமநாதன் கட்புல மற்றும் ஆற்றுகைகள் பீட நடனத்துறை மாணவிகள் வரவேற்பு நடனத்தை அளிக்கை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து வரவேற்புரையினை திரு. ஈ. குமரன் (சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை) நிகழ்த்தினார். தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் சிரேஷ்ட பேராசிரியரும் தலைவருமான பேராசிரியர். கி. விசாகரூபன் தலைமையுரை ஆற்றினார். தொடர்ந்து மாநாட்டின் இணைத் தலைவரும் கலைப்பீடாதிபதியுமான பேராசிரியர். சி. ரகுராம் வாழ்த்துரை நல்கினார். அடுத்த நிகழ்வாக பேராசிரியர். கி. விசாகரூபன் அவர்களின் திறப்புரைஞர் அறிமுகத்தைத் தொடர்ந்து பேராசிரியர். க. பஞ்சாங்கம் (ஓய்வுநிலை இணைப் பேராசிரியர், காஞ்சி மாமுனிவர் அரசு மேற்படிப்பு ஆய்வு மையம், பாண்டிச்சேரி, இந்தியா) ‘மானுட விடுதலை நோக்கில் ஈழத்துத் தமிழ்த் திறனாய்வுகள்’ என்ற தொனிப்பொருளில் திறப்புரை ஆற்றினார். திறப்புரைஞரின் உரையைத் தொடர்ந்து மூத்த படைப்பாளுமைக்கான கௌரவிப்பு இடம்பெற்றது.
முதலாவதாக உயராளுமைக்கான கௌரவிப்பு நடைபெற்றது. இதில் பேராயர். கலாநிதி எஸ். ஜெபநேசன் கௌரவிக்கப்பட்டார். மூத்த படைப்பாளுமைக்கான கௌரவத்தினை சோ. பத்மநாதன் (சோ.ப), அ. யேசுராசா, ஐ. சாந்தன், குந்தவை (இரா சடாட்சரதேவி) ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
அடுத்து தமிழ்த்துறையினரால் வடக்கு மாகாணப் பாடசாலை உயர்தர வகுப்பு மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, தமிழறிவுப்போட்டிப் பரீட்சையில் வெற்றியீட்டிய முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான கௌhரவிப்பும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அனைத்துப்பீட மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட தமிழறிவுப் போட்டிப் பரீட்சையில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும் முறையே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர், கலைப்பீடாதிபதி, திறப்புரைஞர் ஆகியோரால் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆய்வுக்கட்டுரைத் தொகுதி வெளியீடு நடைபெற்றது. இவ் ஆய்வுக்கட்டுரைத் தொகுதியை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராசா வெளியிட்டுவைக்க, திறப்புரைஞராகக் கலந்து சிறப்பித்த பேராசிரியர். க. பஞ்சாங்கம் அதன் முதற்பிரதியைப்; பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராசா அவர்களின் வாழ்த்துரையும் இடம்பெற்றது.
நிறைவாக, ஐந்தாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டினை இணைப்பாளரும் தமிழ்த்துறை பேராசிரியருமான (செல்வி) செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் அவர்களின் நன்றியுரையுடன் ஆரம்ப நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.
தொடர்ந்து பிற்பகல் 02.30 மணிமுதல் ஆய்வரங்க நிகழ்வுகள் நான்கு அமர்வுகளாக நடைபெற்றன. பேராசிரியர். சு. வித்தியானந்தன், கே. டானியல், இலங்கையர்கோன், மஹாகவி ஆகியோரின் பெயர்களில் இந்த அமர்வுகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த அமர்வுகளில் முப்பத்தெட்டு கட்டுரைகள் ஆய்வாளர்களால் அளிக்கை செய்யப்பட்டன.
ஐந்தாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டின் தொடர் நிகழ்வாக இரண்டாம் நாள் நிகழ்வுகள் 08 ஐப்பசி 2024 காலை 09.00 மணியளவில் கைலாசபதி கலையரங்கில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து இறைவணக்கம் இடம்பெற்றது. முதல் நிகழ்வாக தலைமையுரையினைத் தமிழ்த்துறைத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர். கி. விசாகரூபன் அவர்களும், சிறப்புரைகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் அவர்களும், துணைவேந்தர் பேராசிரியர். சி. சிறிசற்குணராசா அவர்களும் வழங்கினர். அடுத்த நிகழ்வாக வடக்கு மாகாணப் பாடசாலை உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் முதலாம் இடம்பெற்ற யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி செல்வி. த. தேனுஜாவின் உரை இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து சமூகவியல்துறை முதுநிலை விரிவுரையாளர் திரு. இ. இராஜேஸ்கண்ணன், தமிழ்த்துறை விரிவுரையாளர் திரு. த. அஜந்தகுமார் ஆகியோரின் நெறியாள்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவர்களின் கவிதாநிகழ்வும், சேர் பொன் இராமநாதன் கட்புல மற்றும் ஆற்றுகைகள் பீடத்தைச் சேர்ந்த இசைத்துறை விரிவுரையாளர்களின் ‘ஈழத்துத் தமிழிசை’ அரங்கும், சேர் பொன் இராமநாதன் கட்புல மற்றும் ஆற்றுகைகள் பீடத்தைச் சேர்ந்த நடனத்துறை மாணவர்களின் நாட்டிய அரங்கும் இடம்பெற்றது. தொடர்ந்து கலாநிதி. வை. விஜயபாஸ்கர் (சிரேஷ்ட விரிவுரையாளர், கல்வியியல்துறை) நெறியாள்கையில் யாழ்ப்பாணம் நாட்டார் வழக்காற்றியல் கழகம் வழங்கிய ‘காத்தான் கூத்து’ அரங்காற்றுகை செய்யப்பட்டது.
நிறைவாக, நன்றியுரையினை தமிழ்த்துறைத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கி. விசாகரூபன் வழங்க இரண்டாம் நாள் நிகழ்வுகள் அனைத்தும் மாலை 06.30 இற்கு இனிதே நிறைவேறின.






















































